ஸ்ரீ காலஹஸ்தி என்கிற பெயரை கேட்டவுடன் நமக்கு நினைவிற்கு வருவது ராகு-கேது பரிகார பூஜை செய்யும் ஸ்தலமாகும் என்பது தான். திருமணத்தடை நீங்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு ராகு-கேது பரிகார பூஜை செய்து வருகின்றனர். பஞ்சபூதங்களில் வாயுவிற்காக கட்டப்பட்ட இத்திருத்தலம் 500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்று கூறப்படுகிறது. இதன் வரலாற்றை கேட்கையில் இப்படியும் ஒரு பக்தி இருக்க முடியுமா? என்கிற அளவிற்கு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகிறது. சைவத் ஸ்தலமான ஸ்ரீ காலஹஸ்தியில் சிவபெருமான் காளத்திநாதர் என்கிற பெயரோடு, ஞானப்பிரசன்னாம்பிகை தாயாரோடு அருள் பாலிக்கின்றார்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் வனமாக இருந்த இந்த இடத்தில் வாயு லிங்கமாக தோன்றிய சிவபெருமானை வழிபட சிலந்தி ஒன்று தினமும் வருமாம். மழையில் நனைந்த சிவபெருமானைக் கண்ட அந்த சிலந்தி தன்னுடைய உமிழ் நீரில் இருந்து உருவாகும் சிலந்தி வலையை பின்னி வைத்ததாம். பெரும் இடி ஒன்று இடித்ததில் அந்த வலை எரிந்து சாம்பலானது. சிலந்தியால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் இறந்து போனதாம். இதனால் அந்த சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அதற்கு முக்தி கொடுத்தாராம்
அதே போல தினமும் நாகம் ஒன்று அந்த லிங்கத்தை ஆரத்தழுவி மாணிக்கங்களை கக்கி அர்ச்சனையாக செய்து வழிபடும். அதற்கு பின்னால் வரும் யானை ஒன்று தன் தும்பிக்கையால் நீரை வாரி இறைத்து அபிஷேகம் செய்யும். பின் மலர்களை பறித்து வந்து அர்ச்சனையும் செய்து வரும். இதனால் அந்த மாணிக்கங்கள் கீழே விழுந்து சிதறி விடுவது உண்டு. தொடர்ந்து இது போல் நடந்து கொண்டிருக்க அந்த நாதத்திற்கு சந்தேகம் வந்தது. யானை இது போல் செய்வதை அந்த நாகம் ஒரு நாள் பார்த்து விட்டது. உடனே கோபமுற்ற நாகம் யானையின் தும்பிக்கையினுள் சென்றுவிட்டு மூச்சடைக்க செய்தது.
சுவாசிக்க முடியாமல் அந்த யானை பாறையில் மோதி மோதி கடைசியில் இரண்டும் இறந்து போனது. இவைகளின் பக்தியை மெச்சிய சிவபெருமான் இவர்களுக்கும் முக்தியை கொடுத்தார் என்று ஸ்தலபுராணம் எடுத்துரைக்கிறது. இந்த தலத்தில் வீற்றிருக்கும் காளத்திநாதர் உருவத்தில் கீழே இரண்டு தந்தங்களும், இடையில் பாம்பும், பின்புறம் சிலந்தியும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்தணர் ஒருவர் இந்த லிங்கத்தை பூஜித்து வந்ததாகவும், அதனை பார்த்துக் கொண்டிருந்த வேடன் ஒருவனுக்கு சிவனின் மேல் கொண்ட பக்தியால் பூஜை செய்ய அதிக ஆர்வம் ஏற்பட்டதாம். அந்தணர் வராத சமயத்தில் இந்த வேடன் தான் வேட்டையாடி வைத்திருந்த பன்றி இறைச்சியை சிவபெருமானுக்கு படைத்து வந்தானாம். ஒரு நாள் இதை அறிந்த அந்த அந்தணர் மிகப்பெரிய தவறு நடந்து விட்டதாக எண்ணி வருந்தினார். அன்று இரவு அந்தனர் கனவில் வந்த சிவபெருமான், ‘நாளை ஒளிந்து இருந்து இந்த இறைச்சியை வைப்பது யார் எனவும், அவருடைய பக்தியை பார்’ என்றும் கூறினாராம்.
அதன் படியே மறுநாள் ஒளிந்திருந்த அந்தணருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கம் போல் வேடன் வந்து இறைச்சியை படைத்து வழிபாடுகள் செய்தானாம். அப்போது சிவபெருமானின் ஒரு கண்ணிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஊற்றியது. இதைக் கண்டு பதறிப்போன வேடன் எவ்வளவோ முயற்சித்தும் ரத்தம் நிற்க காரணத்தினால் தன்னுடைய ஒரு கண்ணை எடுத்து லிங்கத்திற்கு வைத்து விட்டான், உடனே ரத்தம் நின்று விட்டது. அடுத்ததாக மறு கண்ணில் இருந்தும் ரத்தம் பெருக்கெடுத்தது. அந்த வேடன் தன்னுடைய கால் கட்டை விரலால் ரத்தம் வழிவதை தடுக்க லிங்கத்தின் கண்களில் வைத்து இரண்டாவது கண்ணை அம்புகளால் தோண்டி எடுக்க முற்பட்டதும் சிவபெருமான் காட்சி கொடுத்து, கண்ணப்ப நிற்க… கண்ணப்ப நிற்க… கண்ணப்ப நிற்க… என்று மும்முறை கூறினாராம். இதனை கண்டு நெகிழ்ந்து போனார் அந்தணர்.
பக்திக்கு மிஞ்சிய ஞானம் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். சைவ கடவுளான சிவபெருமான் இறைச்சியை வைத்து வழிபட்டாலும் தீவிர பக்தரான அந்த வேடனுடைய பக்தியை ஏற்ற காரணத்தினால் பிற்காலத்தில் அந்த வேடனுக்கும் இந்த தலத்தில் இடம் கிடைத்தது. திண்ணனார் என்கிற அந்த வேடனின் பெயர் கண்ணப்பர் என்று புகழப்பட்டது. இந்த கோவிலில் அவரையும் காண முடியும்.
ஸ்தல சிறப்புகள்:
துளி அளவிலும் காற்று புகாத கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் இந்த லிங்கத்திற்கு ஏற்றப்படும் தீபம் ஆனது படிப்படியாக மேலெழும்பி அழகாக நிற்காமல் அசைந்து ஆடிக் கொண்டே இருக்கும். காற்றே இல்லாத இடத்தில் தீபம் மட்டும் அசைந்து ஆடுவது வியப்பிற்குரியது என்பது விஞ்ஞானிகள் கூற்று. ஸ்ரீ காளஹஸ்தி என்ற பெயர் காரணம் தெரியுமா? ஸ்ரீ என்பது சிலந்தியையும், காளம் என்பது நாகத்தையும், அத்தி என்பது யானையையும் குறிப்பதால் இப்பெயர் பெற்று விளங்குகிறது.
அகத்தியர் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டு இங்கிருக்கும் விநாயகரை வணங்காமல் சென்றது விநாயகரை கோபம் மூட்டியது. இதனால் விநாயகர் அருகில் இருக்கின்ற பொன்முகலி ஆற்றை முழுவதுமாக வற்றி போகுமாறு செய்து விட்டார். இதனால் மனம் வருந்திய அகத்தியர் விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கியதாக தலபுராணம் கூறுகிறது. பிற்காலத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்த இடம் ஆழத்தில் சென்றதால் இந்த விநாயகர் பாதாள விநாயகர் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் இந்த விநாயகரைத் தரிசிக்க பக்தர்கள் 20 அடி ஆழத்திற்கு செல்ல வேண்டியதாக உள்ளது.
கோவிலைப்பற்றி பல குறிப்புகள் தேவாரப் பாடல்களும், புராணங்களும் தெளிவாக கூறுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு எத்தனை குறைகள் இருந்தாலும் உடனே நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. திருப்பதி செல்பவர்கள் பெரும்பாலும் காளத்தி நாதரை வழிபடாமல் வீடு திரும்புவதில்லை. அனைவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் திருக்காளஹஸ்தி ஒன்று என்பதைக் கூறி இப்பதிவை நிறைவு செய்வோம்.
இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
Facebook page: https://facebook.com/swamydharisanam
WhatsApp group: https://chat.whatsapp.com/FwmH52rCW8fAK7CZr4pu6T
Instagram: https://instagram.com/swamydharisanam