இன்று ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாள்
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பன்னீர்இலை விபூதி பிரசாத மகிமை :
ஸ்ரீ செந்திற்பிரான், ஆணவம் கன்மம் மாயையாகப் பிரதிபலித்த சூரபன்மன், அவன் தம்பிமார் சிங்கமுகன்,யானைமுகன் ஆகிய அசுரர்களை வதைத்தருளி ஜயந்திபுரம் என்ற திருசெந்தூரில் நவரத்ன மயமான அரியாசனத்தில் அமர்ந்து கொண்டு தர்பாரில் செங்கோல் பிடித்து, சர்வலோகங்களுக்கும் ராஜாதிராஜனாக விளங்கிவரும் சந்தர்ப்பத்தில் அவருடைய பெருமையைப் போதிக்கின்ற சகல வேதங்களும் ஒன்று சேர்ந்து அந்தக் குமரக்கடவுளினுடைய மகிமையை விளக்க பன்னீர் மரங்களாக இத்தலத்தில் தோற்றங்கொண்டுள்ளன.
ஆக இப்பன்னீர் மரங்களின் இலைகளும் வேதமந்திர சக்தியை உடையனவாயுள்ளன. ஸ்ரீ விசாகனுக்கு விபூதி அபிஷேகம் செய்து அந்த விபூதியைப் பன்னீர் இலையில் வைத்து சம்பந்தப்படுத்துவதால் அந்நீறு வேத மந்திர சக்தியைப் பெறுகிறது.
இவ்வாறு சக்திபெற்ற இலைவிபூதியைக் கண்ட மாத்திரத்தில் சகவித ரோகங்களும் பூதபைசாசங்களும் வெகு தூரத்திற்கப்பால் ஓடி விலகி விடுகின்றன.
சுமார் முன்னூற்றைம்பது ஆண்டுகட்கு முன் செந்திற்குமரன் கனவிலிட்ட கட்டளைப்படி, திருச்செந்தூர் மேலக் கோபுரம் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி சுவாமி தம்பிரானவர்களால் நிமாணிக்கப்பட்டது. இறைவனால் இட்டபணியை நிறைவேற்றத் தம்பிரானவர்களிடம் போதிய பொருளில்லை. அவனருள் மட்டுமிருந்தது, திருப்பணியை பரபரப்புடன் ஆரம்பித்தார். கூலியாட்களுக்கு கூலிக்குப் பதிலாக, செந்திலாதிபன் இலைவிபூதியை, வேலையைவிட்டு வீட்டுக்குப் போகும் போது கொடுத்து ஸ்ரீ தூண்டுகை விநாயகர் கோவிலைத் தாண்டிப்போய்த் தான் பெற்றுக்கொண்ட விபூதிப்பிரசாதத்தை திறந்து பார்க்கவேண்டுமென்று பணித்தார் தம்பிரானவர்கள். கூலியாட்களும் அப்படியே செய்தனர். பன்னீர் இலையைத் திறந்து பார்க்குங்கால் தத்தம் உழைப்பிற்குத் தக்க ஊதியமிருப்பதை ஒவ்வொருவரும் கண்டு மகிழ்ந்தனர்.
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் சரித்திரத்தைக் கவியாகப் பாடிய திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள் திருச்செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள், இலைவிபூதியின் மகிமையை எடுத்துச்சொல்லி, பக்தர்களுக்கு அப்பிரசாதத்தை வழங்கும் காட்சியை ஸ்ரீ குமரகுருபரர் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்கள். அதன் மகிமையைக் காண்க.
“இலையமில் குமரவேள் முன் வணங்கு வார்க் கென்றுந்துன்ப
மிலையடு பகை சற்றே னுமிலை படுபிணி நிரப்பு
மிலையளற்றுழன்று வீழ்தலிலை பலபவத்துச் சார்பு
மிலையென விலை விபூதி யெடுத்தெடுத் துதவல் கண்டார் “
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி தேவஸ்தான வெளியீடான திருச்செந்தில் இலைவிபூதி மகிமை(நான்காம் பதிப்பு – 1961) என்னும் நூலில் இருந்து…