Homeஆன்மிகம்பைரவர் பற்றி தெரிந்து கொள்வோம் !!!

பைரவர் பற்றி தெரிந்து கொள்வோம் !!!



ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதில், கார்த்திகை அஷ்டமி மிகவும் உயர்ந்தது.

அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது.
தாருகாசுரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான்.
உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.

பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. “காளம்’ (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, “காளி’ என பெயர் சூட்டினாள். காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, “பைரவர்’ என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, “காளபைரவர்’ எனப்பட்டு தற்போது, “காலபைரவர்’ ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர்.

தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சு மெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர். இதுபோல், வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக, நாய் வாகனம் கருதப்படுகிறது. நாய்க்கு, “வேதஞாளி’ என்ற பெயர் இருக்கிறது.

பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர்.

சித்திரை: ஸ்நாதனாஷ்டமி, வைகாசி: சதாசிவாஷ்டமி, ஆனி: பகவதாஷ்டமி, ஆடி: நீலகண்டாஷ்டமி, ஆவணி: ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி: சம்புகாஷ்டமி, ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி. கார்த்திகை: கால பைரவாஷ்டமி, மார்கழி: சங்கராஷ்டமி, தை: தேவதாஷ்டமி, மாசி: மகேஸ்வராஷ்டமி, பங்குனி: திரியம்பகாஷ்டமி.
இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

நவக்கிரக பைரவர்

பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம்.

மேஷ ராசி தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், அடித்தளங்கில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

அஷ்டமி செவ்வாய்

தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும்.
அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும். செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.

தேங்காய் மூடி விளக்கு

ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும். அந்த கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு
விளக்கேற்ற சனி தோஷங்கள், ஏழரை சனி, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும்.
போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம்.
நாளை வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள்.
அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
மேலும் நாளை திருவாதிரை நட்சத்திரத்துடன் வருவதால் கூடுதல் சிறப்பாகும்.

பைரவ காயத்ரி மந்திரம்

ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

இந்த காயத்ரியை அஷ்டமி வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.
பைரவரை மூலவராகக் கொண்ட கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் உள்ளது. இங்குள்ள பைரவர் முன், ஒரு யந்திரம் உள்ளது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இங்கு பைரவாஷ்டமி விழா சிறப்பாக நடக்கும். தஞ்சாவூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில், வாயுமேடு கிராமம் இருக்கிறது. இங்கிருந்து பிரியும் ரோட்டில், 2 கி.மீ., சென்றால், தகட்டூரை அடையலாம்.
கேரளாவிலுள்ள வைக்கம் மகாதேவர் கோவிலில், கார்த்திகை தேய்பிறை அஷ்டமியை மகாதேவாஷ்டமி என்ற பெயரில் விமரிசையாக நிகழ்த்துவர்.
அந்த நாளில், இங்கு அன்னதானம் செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். இப்போதே பதிவு செய்தால், சில ஆண்டுகளுக்குப் பின் தானம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மொட்டைக்கோபுரம் அருகில் உள்ள பைரவர் சக்தி வாய்ந்தவர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவிலில் உள்ள பைரவர், இரட்டை நாய்களுடன் காவல் செய்கிறார்.
பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம். கஷ்டங்கள் தீவிரமாகும் போது, காவல் தெய்வமான பைரவரை வணங்குங்கள். அவை காற்றில் பறக்கும் பஞ்சாகி விடும்.

பைரவர் வழிபாடு கைமேல் பலன்:

ஒம் ஸ்ரீ கால பைரவ ராய நமஹ:

தினமும் 11முறை பாராயணம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும் !!!!
தியானம்

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments