Homeஆலயங்கள்நாளை மாசி மகம்

நாளை மாசி மகம்



கடவுள் வழிபாட்டோடு இணைந்த விரதங்களில் சிறப்புப் பெற்றது மாசிமகம். எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்நாளில் தான் பார்வதி தேவி, தக்கன் என்பவரின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக் கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர்.

மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன், கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலமே மாசிமகமாக திகழ்கிறது. இந்நாளில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் கோவில்களில் அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது. இதனை கடலாடும் நாள் என்றும், தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது விசேஷம். அப்படி செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை, சகல தோஷ நிவர்த்தி ஏற்படும். இந்த விரதம் இருக்க விரும்புபவர்கள் காலை எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, உலர்ந்த ஆடைகளை அணிந்து சிவ சிந்தனையுடன் சிவன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். மதியம் ஒரு வேளை உணவு உட்கொள்ள வேண்டும். இரவு பால், பழம் அருந்தலாம். அன்று முழுவதும் வேறு வேலைகளில் ஈடு படாமல் தேவார திருவாசகங்களை பாடிய படி இருக்க வேண்டும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அத்துடன் மதியம் உண்ணும் போது சிவனடியார் ஒருவருக்கு அன்னதானம் வழங்குவது சிறந்தது.

மக நட்சத்திரத்தை ‘பித்ருதேவதா நட்சத்திரம்’ என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிக்ஷமாக இருக்கும். எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்யவேண்டும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை ‘பிதுர் மஹா ஸ்நானம்’ என்கிறது சாஸ்திரம்.

மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் சொல்கின்றன. உலகத்தைப் படைப்பதற்காக, உலகப் பொருட்கள் அனைத்தையும் ஒரு கும்பத்தில் வைத்தனர். அது நீரில் மிதந்து வரும் பொழுது, கும்பத்தை இறைவன் அம்பால் எய்ய அதன் மூக்குப் பகுதி, அதாவது முன்னால் இருக்கும் கூம்பு போன்ற கோணப் பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடமே ‘கும்பகோணம்’ என்ற திருத்தலமாகப் பெயர் பெற்றது.

அங்கு ‘மகாமக’ விழா சிறப்பாக நடைபெறும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற வருடங்களில் வரும் மாசி மாதங்களில் ‘மகம்’ நட்சத்திரம் வரும் பொழுது, நாம் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும்.

புராண வரலாறு

மாசி மகத்தில் தீர்த்தமாடல் சிறப்பினை பெற்றதற்கு ஒரு புராண வரலாறு உண்டு.

ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கட்டப்பட்டுக் கடலில் வீசப்பட்டு இருந்தார். வருணன் செயல்படாததால் உலகில் மழையின்றி வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டது. அனைத்து உயிர்களும் துன்புற்றன. தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை விடுவிக்கும் படி வேண்டி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசிமக திருநாளாகும்.

விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானிடம் வரம் கேட்டார். தான் பிரமஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடல் நீரில் இருந்தபடியே சிவனை வணங்கியதால் தோஷம் நீங்கியதை போன்று மாசிமகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு அவர் களின் பாவவினைகள், பிறவி பிணிகள், துன்பங்கள் யாவும் நீங்கி அவர்கள் உயர்வு பெற அருள வேண்டும் என கேட்டுக் கொண்டார். சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்தமாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

மாசிமகத்தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங்களில் ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேசுவரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் கொடுத்து பிதுர்க்கடன் செய்வது நலன் தரும்.

மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் புண்டரீக மகரிஷி, மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார்.
இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.

தீர்த்தமாடும் வழிமுறை

கடல், புண்ணிய நதிகளில் புனித நீராடும் போது ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராட கூடாது. உடுத்திய ஆடையின் மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றிக் கொள்ள வேண்டும். தீர்த்தமாடுவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து தெளிக்க வேண்டும். ஈர ஆடையுடன் மூழ்கக்கூடாது. இரவில் தீர்த்தத்தில் மூழ்கக்கூடாது. பிரம்மஹத்தி தோஷத்தை போக்கி நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவதும் மாசி மகத்தில் தான்.

புனித நீராடுபவர்களுக்கு சிவபெருமானும், மகா விஷ்ணுவும் உரிய பலனை வழங்குவார்கள். ஒரு முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கினால் சொர்க்கப்பேறு கிடைக்கும். மூன்றாம் முறை மூழ்கி எழுந்தால் அவர் செய்த புண்ணியத்திற்கு ஈடே கிடையாது. நீராட முடியாதவர்கள் சிவ சிந்தனையுடன் மாசி மக புராணம் படிக்க வேண்டும்.

மாசிமகத்தன்று அதிகாலையில் நீராடி விட்டு துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வாழ்வில் இன்பமும், வெற்றியும் கிடைக்கும். மாசி மகத்தில் சரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments