🙏அனுமன் ஜெயந்தி 2021: 100008 வடைமாலையில் ஜொலித்த நாமக்கல் ஆஞ்சநேயர் – பக்தர்கள் அனந்த கோடி தரிசனம் 🙏🔥🪔🪔🪔💐🌺
நாமக்கல்: மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயங்களில் அவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
திதிகளில் புண்ணியமான திதி அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவரே ஆஞ்சநேயன். இன்றைய தினம் மார்கழி அமாவாசை நாள் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் அனுமன் சிரஞ்சீவியாக இந்த மண்ணில் இருக்கிறார். ராம நாமம் கேட்கும் இடங்களில் ஆஞ்சநேயர் அமர்ந்திருப்பார் என்று நம்பப்படுகிறது. ராமாயண காவியத்தில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ராமபிரானின் சேவகன் அனுமனை அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும்.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். இன்றைய தினம் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பின்னர் ஒரு லட்சத்து 8 வடைமாலை அணிவிக்கப்பட்டது.
மார்கழி அமாவாசை மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் எழுந்தருளி அருள் பாவிக்கும் 9 அடி உயரமுள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் பஞ்சமுக அனுமனுக்கும் செந்தூர ஆஞ்சநேயருக்கும் சிறப்பு ஹோமங்கள் திருமஞ்சனம் மற்றும் ஆராதனை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.
ஸ்ரீ குபேர ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறுகிறது. செந்தூர அபிஷேகம் செய்யப்பட்டு, 1008 ஜாங்கிரி மாலையும், 1008 வடைமாலையும் அணிவிக்கப்படுகிறது. பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு ஹோமம் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது. 1008 எலுமிச்சை மாலை அனுவிக்கப்பட்டு 1008 வாழைப்பழ மாலை சாற்றப்படுகிறது.