பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதம்!
பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப்பானது. மலை குன்றுகள் இல்லாத மணல் பகுதிகள் நிறைந்த சம தளத்தில், கற்கலை கொண்டு கோவில் அமைத்துள்ளார். இக்கோவிலை ராஜராஜசோழன் கட்ட தனிப்பட்ட வரலாறு உண்டு. அதாவது, காஞ்சிபுரத்தில் ஒரு முறை ராஜராஜசோழன் சென்ற போது, அங்கு ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது.
அதே போல் ஒரு கோவிலை கட்ட விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார். அப்படி கட்டப்பட்ட கோவில்தான் பெரியகோவில். வீரசோழன் குஞ்சரமல்லன் என்ற பெருந்தச்சன் முன்னிலையில், மதுராந்தகனாகன நித்த வினோத பெருந்தச்சன் உதவியாலும் 6 ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டது. கோவிலை சுற்றி மதிலரண், நீரரண் என இரு அரண்களையும் அகழியையும், அமைத்தார்.
இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார்.
கருவறைக்கு மேலே உள்ள விமானம், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர்ந்து காணப்படும் விமானம், “தட்சிணமேரு எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. ராஜராஜசோழன் காலத்தில் திருச்சுற்று மாளிகை அருகே, பிரதான நுழைவு கோபுரத்திற்கு எதிரே அமைந்துள்ளது. ராஜராஜன் நுழைவு வாயிலையும், சோழ ஒற்றனை சிறை வைத்த, சேர மன்னன் ராஜராஜ பாஸ்கர ரவிவர்மனை கேரளாவில் உள்ள காந்தளூர்ச்சாலை என்னும் பகுதியில் போரில் வென்றதன் நினைவாக கேரளாந்தகன் நுழைவு வாயில் எழுப்பட்டது. அதன் பிறகு, கருவறை வடக்கில் சண்டீகேஸ்வர் கோவிலையும், நடராஜர் மண்படபத்தையும், நந்தியம் பெருமானையும் அமைந்தார். அந்த நந்தி தற்போது திருச்சுற்று மாளிகையில் வராஹியம்மன் சன்னதி அருகே, வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலின் பிரம்மாண்டமான சிவலிங்கம்!
கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரியதாகும். ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரம், 23 1/2 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
சிவலிங்கத்தைச் சுற்றி வர இடமும் உள்ளது. நமது பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேகம், ஆராதனை நடத்த இருபுறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சைக் கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் நடக்கிறது. தினமும் காலை சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என நான்கு கால பூஜைகள் நடக்கின்றன.
தஞ்சைப் பெரியகோயில் விமானத்தை மூடியுள்ள ‘பிரம்மராந்திரக்கல்’ !
தஞ்சைப் பெரியகோயில் விமானத்தில் நான்கு தளங்கள் உள்ளன. அவற்றிற்கு மேல் பார்வதியும், சிவபெருமானும், தேவர்களும், கணங்களும் சூழ அமர்ந்துள்ளனர். கயிலாயத்தில் அவர்கள் இருப்பது போல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. உட்கூடாக உள்ள விமானத்தை மூடியுள்ள ‘பிரம்மராந்திரக்கல்’ 26.75 சதுர அடி சதுரம் கொண்டது. இதன் நான்கு மூலைகளிலும் 1.34 மீ உயரமும், 1.40மீ நீளமும் உடைய நான்கு நந்திகள் உள்ளன. வடமேற்குத் திசையில் பூத உருவம் ஒன்று உள்ளது.
கிரீவம் எனப்படும் கழுத்துப்பகுதியும், அதற்கு மேல் அரைக்கோளமாக அமைந்துள்ள சிகரம் எனப்படும் தலைப்பகுதியும் எட்டுப்பட்டை வடிவில் அமைந்துள்ளன.
தட்சிண மேரு என்பது ‘தெற்கே இருக்கும் மலை’ என்று பொருள். தமிழர்களின் கட்டடக் கலைத்திறனுக்குச் சான்றாக உயர்ந்து நிற்கிறது தஞ்சைப் பெரியகோயில், `ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து, நம் கண் முன்னே நிற்கும் பிரம்மாண்டம்’ என பெரிய கோயில் கட்டுமானத்தைப் பற்றி வரலாற்று வல்லுநர்கள் அதிசயிக்கின்றனர்.
கோமுகத்தை தாங்கும் பூதகணம்
கருவறையில் அபிஷேகம் தீர்த்தம் வெளிவரும் நிர்மால்யத் தொட்டி இங்கு வித்தியாசமானதாகும். விமானத்திற்கு வடக்குப்புற அடிபாகத்தில் உள்ள கோமுகத்தை பூதகணம் ஒன்று தாங்குகிறது. எதையும் பிரம்மாண்டமாகவும், வித்தியாசமாகவும் செயல்படுத்துபவர் ராஜராஜன் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.