*ஆத்மநாதர் கோயில்* ஆத்ம நாதர் திருக்கோவிலில் மூலவராக ஆதி அந்தம் இல்லாத ஆதிசிவன் ஆத்மநாதராகவும், தாயாரான பார்வதி யோகாம்பாளாகவும் காட்சி தருகின்றனர். இந்த கோவிலில் உள்ள சிவபெருமான், வடிவம் இல்லாமல் தலவிருட்சமான குருந்தமர வடிவில் குடிகொண்டுள்ளார்.
இந்த குருந்தமரம் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே கருவறையில் அமைந்துள்ளது. அதன் மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. அதில் குவளையை உடலாகவும் அதற்கு உள்ளே இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு உடலுக்குள் இருக்கும் ஆத்மாவை காப்பவராக இந்த ஈசனை ஆத்மநாத ஈஸ்வரன் என்று அழைக்கின்றோம். இத்திருக்கோவிலில் கருவரையில் ஈசன் அரூபமாகவும், அருவுருவமாக குருந்த மர வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகர் ரூபத்திலும் இருக்கின்றனர். வரலாறு ஆவுடையார் கோவில் பகுதி மக்களுடைய நிலத்தை குறுநில மன்னன் ஒருவன் பறித்துக் கொண்டான்.
மக்கள் பேரரசனிடம் அந்த நிலத்தை வாங்கி தர வேண்டி முறையிட்டனர். ஆனால் குறுநில மன்னனோ அந்த நிலம் தன்னுடையது என்று மக்களிடம் வாதிட்டார். இந்த நிலமானது மக்களுடையது என்பதற்கு ஏதாவது சாட்சி இருக்கிறதா என்று கேட்டார் மன்னர். மன்னனை எதிர்த்து நிற்க முடியாத மக்கள் அந்த சிவபெருமானை நாடினர்.
அந்த நிலம் மக்களுடையது தான் என்ற உண்மை அந்த சிவபெருமானைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று, கோவிலில் வந்து முறையிட்டனர். அந்த சிவபெருமான் மாறுவேடத்தில் பேரரசனிடம் சென்றார். பேரரசனின் சபையில் குறுநில மன்னருக்கும், மாறுவேடத்தில் வந்த சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. மாறுவேடத்தில் வந்த சிவபெருமான் குறுநில மன்னனை அழைத்து “மன்னா உன் நிலம் எந்த தன்மையை உடையது” என்று கேட்டார். அதற்கு அந்த குருநில மன்னனோ “அது வறண்ட பூமி என்று கூறினார்.” மாறுவேடத்தில் வந்திருந்த சிவபெருமான் அதனை மறுத்தார்.
பேரரசரே அது செழிப்பான நிலம் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. நிலத்தை தோண்டும் போது தண்ணீர் வரும் என்றார். அதன்படியே நிலத்தை தோண்ட நீர்வரத்து வெளிப்பட்டது. குறுநில மன்னன் தலைகுனிந்து மக்களிடமே நிலத்தை ஒப்படைத்து விட்டார். சிவன் தண்ணீர் காட்டிய இந்த இடம் இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கின்றது. அப்பகுதியை ‘கீழேநீர்காட்டி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பஞ்சாட்சர மண்டபத்தின் மேல் விதானத்தில் ஓவியமாக வரைந்துள்ளனர். தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே இங்கு அம்பாளுக்கும் உருவமில்லை. அவள் தவம் செய்த போது பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடைபெறும். பலன்கள் இந்த கோவிலில் வந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு குருபலன் கூடிவரும்.
மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இந்த தளத்தில் வந்து வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, சிறந்த ஞானத்தையும் பெறுவர். தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை மேற்கொள்கின்றனர். இந்தக் கோவிலின் அம்பாள் சன்னதி முன்பாக தொட்டில், வளையல் கட்டி வழிபட்டால் புத்திரப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.
செல்லும் வழி ஆவுடையார் கோயில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருவாசகப் பாடல்கள் அனைத்திலும் திருப்பெருந்துறை என்று கூறப்படுகிறது. தற்சமயம் ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. முகவரி அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில், ஆவுடையார் கோயில் 614 618, புதுக்கோட்டை மாவட்டம். போன்: +914371233301 கைப்பேசி: 9894731606, 9159854014.